காரசாரமான முட்டை பொடிமாஸ் ரெசிபி
எப்பவும் ஒரே மாதிரி பொடிமாஸ் செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்ல இருக்கும்...
உங்கள் வீட்டில் தினமும் முட்டை செய்வீர்களா? அதுவும் அந்த முட்டையை பெரும்பாலும் பொடிமாஸ் செய்து தான் சாப்பிடுவீர்களா? எப்போதும் ஒரே மாதிரி முட்டை பொடிமாஸ் செய்வீர்களானால், அடுத்தமுறை சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் சற்று காரசாரமாக செய்து சாப்பிடுங்கள்.
இந்த காரமான முட்டை பொடிமாஸ் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த பொடிமாஸ் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். பேச்சுலர்கள் இந்த பொடிமாஸை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள். அந்த அளவில் வாய்க்கு ருசியாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
காரசாரமான முட்டை பொடிமாஸ் ரெசிபியின் செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
புளி - சிறிய துண்டு
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் - அறை டீஸ்பூன்
சோம்பு தூள் - அறை டீஸ்பூன்
கரம் மசாலா அறை டீஸ்பூன்
பொடிமாஸ் செய்வதற்கு...
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
முட்டை - 5
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - அறை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தண்ணீர் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், புளி, மிளகாய் தூள், சீரகத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் 5 முட்டைகளை உடைத்து ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு தூவி பொடிமாஸ் போன்று நன்கு கிளறி, முட்டை வெந்ததும், ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு தூவி பச்சை வாசனை நீங்கி நன்கு சுருள வதக்க வேண்டும்.
இறுதியாக அதில் முட்டை பொடிமாஸை சேர்த்து நன்கு மசாலா முட்டையுடன் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான மற்றும் காரசாரமான முட்டை பொடிமாஸ் தயார்.
Comments
Post a Comment