ஸ்பெஷலான மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி
விடுமுறை நாட்களில் அசைவ உணவை வீட்டில் சமைத்து அவசரமின்றி பொறுமையாக ருசித்து சாப்பிடுவதே தனி சுகம் என்று கூறலாம். அதுவும் உங்களுக்கு வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிப்பது பிடிக்குமானால், அதை முயற்சித்து சுவைப்பது இன்னும் அற்புதமான அனுபவத்தைத் தரும். இன்று உங்கள் வீட்டில் மட்டன் எடுத்திருந்தால், அதைக் கொண்டு ஒரு வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், மட்டன் வெள்ளை குருமாவை முயற்சிக்கலாம். இந்த குருமா சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோவை, ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
அதுவும் தற்போது ரமலான் நோன்பு நோற்பவர்கள், இந்த ரெசிபியை செய்து மாலையில் சாப்பிடலாம். உங்களுக்கு மட்டன் வெள்ளை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் வெள்ளை குருமாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மட்டன் வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
மட்டன் - அறை கிலோ
தயிர் - கால் கப்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
குருமாவிற்கு...
நெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
பட்டை - ஒரு சிறிய துண்டு
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - ஒரு (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5-6
கறிவேப்பிலை - ஒரு கையளவு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - அறை கப்
கசகசா - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த மட்டனுடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
பின் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி 6 முதல் 8 விசில் விட்டு மட்டனை நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெள்ளை மட்டன் குருமா தயார்...!🤔
Comments
Post a Comment