பீமன் துரியோதனனை கடுமையாக தாக்குதல்..! பாகம் - 105

பீமன் துரியோதனனை கடுமையாக தாக்குதல்..!

சமந்த பஞ்சகத்தில் துரியோதனனுக்கும், பீமனுக்கும் போர் ஆரம்பமானது. பீமன் துரியோதனனிடம்! இந்தப் போரில் நீ என்னைக் கொல்லவேண்டும் அல்லது நான் உன்னைக் கொல்ல வேண்டும்! என்று கூறிக்கொண்டே போர் புரிந்தான்.

போர் நடந்து கொண்டிருக்கும்போது துரியோதனன் ஒரு தந்திரம் செய்து பீமனின் உயிர்நிலை இருந்த இரகசியத்தை அறிந்து கொள்ள நினைத்தான்.

அதற்காக துரியோதனன் பீமனிடம் நீ எவ்வளவு பெரிய வீரன்? உன்னுடைய உயிர்நிலை உடம்பில் எங்கே இருக்கிறதென்று சொல் பார்ப்போம் என்று கேட்டான்.

இந்தக் கேள்வியின் வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத பீமன், துரியோதனனிடம் என் உயிர்நிலை தலையில் இருக்கிறது என்று பதில் கூறினான். உடனே துரியோதனன் பீமனுடைய தலையில் ஓங்கி ஓங்கி அடித்தான். 

உயிர்நிலையில் தொடர்ந்து அடிவிழுந்த போது தான் துரியோதனனுடைய வஞ்சகம் பீமனுக்கு புரிந்தது. துரியோதனனிடம் ஏமாந்துவிட்டதை எண்ணி, பீமன் அவனுடைய உயிர்நிலை எங்கிருக்கிறது? என்பதைப் பற்றி துரியோதனனிடம் கேட்டான்.

பீமனுடைய கேள்விக்கு துரியோதனன் சாமர்த்தியமாகப் பொய் சொல்லி சமாளித்து விட்டான். தன் உயிர்நிலை தனது தொடையிலிருப்பதை சொல்லாமல், பீமனிடம் உன்னைப் போலவே எனக்கும் தலையில்தான் உயிர்நிலை இருக்கிறது என்று பொய் சொன்னான்.

அதை நிஜமென்று நினைத்துக் கொண்ட பீமன் துரியோதனனுடைய தலைமேல் தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான். ஆனால் அந்த அடிகள் துரியோதனனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அவன் சிறிதும் வலியின்றி பீமனை எதிர்த்து போர் செய்தான். 

பீமனுடைய தலையில் துரியோதனனுடைய அடிகள் விழும்போதெல்லாம் அவன் மயங்கி கீழே சுருண்டு விழுந்தான். ஆனால் துரியோதனனுடைய தலையில் பீமனுடைய அடிகள் விழும் போது துரியோதனன் மயங்கி கீழே விழவில்லை.

இவ்வாறு நடப்பதை கிருஷ்ணர் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். துரியோதனன், பீமனை ஏமாற்றிவிட்டான் என்ற உண்மை கிருஷ்ணருக்கு புரிந்தது. உடனே கிருஷ்ணர் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அர்ஜூனனை அழைத்து இரகசியமாக அவனிடம் துரியோதனனுடைய உயிர்நிலை அவன் தொடையில் இருக்கிறது.

ஆனால் தலையிலிருப்பதாக பீமனிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டான். இப்போது இந்த உண்மையை நாம் பீமனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அர்ஜூனனிடம் கூறினார். அதற்காக அர்ஜூனனிடம், பீமனுக்கு அருகே சென்று குறிப்பினால் உண்மையை அவனுக்குத் தெரிவிக்குமாறு கிருஷ்ணர் கூறினார்.

அர்ஜூனனும் அவ்வாறே பீமனின் அருகே சென்று, தன் கையால் தொடையைத் தொட்டுக் காட்டி கண்ணால் ஜாடை செய்தான். பீமனும், துரியோதனன் அவனின் உயிர்நிலை தலையில் இருப்பதாக பொய் கூறி இருக்கிறான், அவன் உயிர்நிலை தொடையில்தான் இருக்கிறது என்று புரிந்து கொண்டான்.

துரியோதனனுடைய உயிர்நிலை எங்கிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதும், பீமன் உடனே தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி கதாயுதத்தால் ஓங்கித் துரியோதனனின் தொடையில் அடித்தான். துரியோதனன், பலமாக விழுந்த அந்த அடியைத் தாங்க முடியாமல் அலறிக் கொண்டே கீழே வீழ்ந்தான். அவன் கீழே விழுந்த பின்பும் பீமனுடைய சினம் அடங்கவில்லை.

துரியோதனனின் மார்பில் ஓங்கிக் குத்தினான். இதனால் துரியோதனன் அணிந்து கொண்டிருந்த பொற்கிரீடம் உருண்டு மண்ணில் புதைந்தது. துரியோதனன் சிறிது நேரம் கழித்து மீண்டும் பீமனோடு போர் செய்வதற்கு எழுந்தான்.

அதைக் கண்ட பீமன் மீண்டும் துரியோதனனை கால்களால் உதைத்து கீழே தள்ளினான். பீமன் துரியோதனனை அடித்துக் கீழே தள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருந்த பலராமருக்கு கோபம் வந்துவிட்டது.

துரியோதனனுடைய நிலையைக் கண்டு அவன்மேல் பலராமருக்கு இரக்கம் வந்து விட்டது. பலராமர் பீமனிடம், நீங்கள் செய்வது போர் முறைக்குச் சிறிதும் பொருந்தாது. முறை தவறி யார் போர் செய்தாலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.

கதைப் போர் செய்வதென்றால் அதற்கு ஓர் விதிமுறை இருப்பது தெரியாதா? கதைப் போரில் இடுப்புக்கு மேல் அடிப்பதுதான் முறை. ஆனால் இடுப்புக்குக் கீழே தொடையில் பீமன் துரியோதனனைத் தாக்கியிருக்கிறான்.

பீமனை நானே அடித்துக் கொல்கிறேன் என்று கோபத்தோடு கூறிக் கொண்டே இரும்பு உலக்கையால் பீமனை அடிப்பதற்கு பலராமர் பாய்ந்தார். ஆனால் அந்த சமயத்தில் கிருஷ்ணர் பலராமரைத் தடுத்து நிறுத்தினார்.

கிருஷ்ணர் பலராமரிடம் அவர்களின் பலநாள் பகையை அவர்களே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு, எவ்வாறு மரணம் நேரும் என்பது பற்றி மைத்ரேயர் முனிவர் இட்ட சாபம் உனக்கு மறந்து விட்டதா? பலம் பொருந்திய பீமன் உனது தொடையை தனது கதையின் வீச்சால் நொறுக்குவான் என்று துரியோதனனை சபித்தார். 

துரியோதனனைத் தன் கையாலேயே கொல்வதாக பீமனும் சபதம் செய்திருக்கிறான். நீயும், விதுரரும் தீர்த்த யாத்திரை சென்று விட்டு இப்போது தான் திரும்பி வருகிறீர்கள். பதினேழு நாட்களாகப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரைப் பற்றி உங்களுக்கு தெரியாது.

பாண்டவர்களுக்கு எதிராகத் துரியோதனன் செய்திருக்கும் அளவற்ற வஞ்சகங்களை நீ பார்த்திருந்தால் இப்படிப் பேச மாட்டாய். சுவேதன், அபிமன்யு போன்ற பாண்டவ வீரர்களையெல்லாம் துரியோதனன் வஞ்சகத்தினாலேயே கொன்றிருக்கிறான்.

இப்போது துரியோதனனை எதிர்த்து பீமன் எப்படிப் போர் புரிந்தாலும் அது நியாயம் தான்! என்று கிருஷ்ணர் பலராமரிடம் கூறி தடுத்து நிறுத்தினார். இதை கேட்ட பின் மறுமொழி எதுவும் பேசாமல் தலை குனிந்தவாறே அங்கிருந்து பலராமர் வெளியேறினார்.


சூரியன் மறைகின்ற நேரமும் அவனுடைய வாழ்வு மறைகின்ற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தன. 



.



தொடரும்...!


Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!