மகாபாரத போரின் பதிமூன்றாம் நாள்.. அபிமன்யுவின் வீழ்ச்சி அர்ஜூனனின் சபதம்.. நடந்தது என்ன? பார்க்கலாம் வாங்க..!

இரவின் அமைதி நிறைந்த ஓய்வுக்குப் பின்பு பதிமூன்றாம் நாள் பொழுது புலர்ந்தது. பதிமூன்றாம் நாள் என்ன நடந்தது? பாண்டவர்களின் நிலை என்ன? என்று பார்க்கலாம் வாங்க..!
பாண்டவர்கள் எப்போதும் போல வெற்றியின்மேல் நம்பிக்கை வைத்துப் போர்க்களத்திற்கு வந்தார்கள். ஆனால் கௌரவர்கள், தொடர்ந்து கிடைத்த தோல்வியை எண்ணி வஞ்சகம் நிறைந்த எண்ணங்களுடன் களத்தில் வந்து நின்றனர். 

துரோணர், இன்று ஒரு பாண்டவரையேனும் பலியிட வேண்டும் என்று முடிவு செய்து தனது படைக்கு சக்கர வியூகம் அமைத்துப் போரிட கட்டளையிட்டார். சிந்து தேசத்தின் அரசனும் இணையற்ற வீரனுமாகிய ஜெயத்ரதனை கௌரவ படை அமைப்பிற்கு தலைவனாக அமைத்துக் கொண்டனர். 

துரோணர், துரியோதனன், கர்ணன் ஆகியவர்கள் அன்றையப் போரில் தர்மரைப் பிடிக்க எண்ணியிருப்பதையும், வேறு சில இரகசியத் திட்டங்களையும், ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட தர்மர், கிருஷ்ணரிடமும், தன் தம்பிகளையும் அழைத்து எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினார். 

போர் தொடங்கியதும் துரியோதனன் யானை, குதிரை, காலாட்படை, தேர் படை என்னும் நால்வகைப் பெரும் படைகளோடு சஞ்சத்தகர்கள் என்ற வீரர்களைப் பாண்டவர்கள் மேல் ஏவினான். அர்ஜூனன் அந்த வீரர்களை வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கினான். அர்ஜுனன் அவர்களில் பலரை களத்தில் வீழ்த்தினான். 

வேறொரு புறத்தில் துஷ்டத்துய்மனும், துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவர் வில்லில் இருந்தும் எதிரெதிரே அம்புகள் மோதிக் கொண்டன. துஷ்டத்துய்மன் தளர்ந்து சோர்ந்து விட்டான். 

ஆனால் துரோணர் நிறுத்தாமல் அம்புகளை ஏவிக் கொண்டிருந்தார். முதல் முதலாகப் பாண்டவர்கள் பக்கம் நேர்ந்த இந்தப் பெரிய தோல்வி போர்க்களம் முழுவதும் பரவியது. 

இதை அறிந்த தர்மர், துஷ்டத்துய்மனிடம் படைத்தலைவனாகிய நீதான் நம்முடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணமாக இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போது இந்த தோல்விக்கு நீயே காரணமாகி விட்டாய் என்று கூறினார். இதைக் கேட்ட துஷ்டத்துய்மன் தலைகுனிந்து நின்றான். 

அதனால் தர்மர், அபிமன்யுவை அழைத்து, கௌரவ படைகள் இப்போது சக்கர வியூகத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். உள்ளே புகுந்து பேர் செய்து அந்த வியூகத்தை எவ்வாறாவது கலைக்க வேண்டும் என்று கூறினார். தர்மரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு அபிமன்யு புறப்பட்டான். 

ஒரு பெரும் படையின் இடையில் புகுந்து அதன் வியூகத்தைக் கலைப்பது என்பது இதற்கு முன்பு அபிமன்யுவுக்கு அனுபவம் இல்லாத விஷயம். வியூகத்திற்குள் நுழைவதென்றால் முதலில் முன் வரிசையில் நிற்கும் அதிரதத் தலைவர்களோடு போர் புரிந்து அவர்களை வென்றாக வேண்டும். 

அபிமன்யு தன் தேரைக் கௌரவப் படையின் அதிரதர்களுக்கு முன்னே நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்கினான். துரோணரைப் போன்ற பெருவீரர்கள்கூட முன் வரிசையில் நின்று அவனை எதிர்த்துப் போரிட்டனர். 

அதில் முதல் வீரராகத் துரோணர் வில்லுடன் நின்று கொண்டிருந்தார். அபிமன்யு சிறிதும் தயங்காமல் அவரை எதிர்த்து விற்போர் புரிந்தான். அபிமன்யு, துரோணரை வியூகத்திலிருந்து துரத்தியே ஆகவேண்டும் என்ற உறுதியோடு போர் செய்தான். 

அவனுடைய வில்லின் வேகம் விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. துரோணருடைய கைகள் ஓய்ந்துவிட்டது. முடிவில் அபிமன்யு துரோணரின் வில்லின் நாணலை அறுத்துக் கீழே தள்ளினான். பின்பு துரோணர் போர் புரிய முடியாமல் அங்கிருந்து சென்றார். 

பின்பு துரோணருடைய புதல்வன் அசுவத்தாமன் நின்று கொண்டிருந்தான். அசுவத்தாமன், தன் தந்தையை அபிமன்யு முறியடித்ததைக் கண்டு அளவு கடந்த கோபத்துடன் நின்று கொண்டிருந்தான். அசுவத்தாமனுக்கும், அபிமன்யுவுக்கும் போர் தொடங்கியது. அசுவத்தாமனை எதிர்த்து அபிமன்யு செய்த போரில் அசுவத்தாமன் ஓய்ந்துவிட்டான். 

மேலும் தன்னம்பிக்கையோடு அபிமன்யு போரிடும்போது கர்ணன் அவனை எதிர்த்து நின்றான். அபிமன்யுவுக்கும் கர்ணனுக்கும் விற்போர் ஏற்பட்டது. அபிமன்யு, கர்ணனைக் கடுமையாக எதிர்த்து போர் செய்தான். அபிமன்யு, கர்ணனையும் தோற்கடிக்கச் செய்துவிட்டான். 

அடுத்ததாக அபிமன்யுவை எதிர்ப்பதற்கு தயாராக நின்றவர்கள் கிருதவர்மனும், கிருபாச்சாரியாரும் ஆவர். அபிமன்யு மேல் அவர்கள் இருவருமாகச் சேர்ந்து அம்புகளைச் சரமாரியாகத் தொடுத்தனர். முதலில் அதைச் சமாளிக்க முடியாமல் இருந்த அபிமன்யு, பின்பு மனதை உறுதி செய்து கொண்டு அவர்களை திணறச் செய்தான். 

கிருதவர்மனும், கிருபாச்சாரியாரும் அபிமன்யுவிடம் போர்புரிய முடியாமல் தோற்றனர். அதே சமயத்தில் சகுனியும் அவனுடைய பெரும் படைகளும், அவனது புதல்வனும் அடங்கிய படையும், அபிமன்யுவை எதிர்த்தனர். 

போரின் ஆரம்பத்தில் அபிமன்யு சகுனியின் புதல்வனை வீழ்த்தினான். இது சகுனியோடு வந்தவர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுபோன்று கௌரவர்களின் சக்கர வியூகத்தை அபிமன்யு தனது போர்த்திறமையால் கலைத்துக் கொண்டிருந்தபோது பீமனும், அபிமன்யுவுக்கு உதவியாக வந்தான். 

பீமனுடைய வருகையால் கௌரவர்களின் சக்கர வியூகத்தில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த பலநாட்டு மன்னர்கள் வீழ்ந்தனர். பீமனும், அபிமன்யுவும் ஒன்று சேர்ந்து கௌரவர்களின் வியூகத்தை உடைத்துக் கொண்டு விரைவாக வருவதை துரியோதனன் பார்த்துவிட்டான். 

பீமன், வீரர்கள் அனைவரையும் எதிர்த்து போர் புரிவதை பார்த்த துரியோதனன் பயந்து கொண்டு ஒரு சூழ்ச்சியை செய்தான். தன் சூழ்ச்சியை பற்றி சிந்து தேசத்து மன்னனாகிய ஜெயத்திரதன் என்பவனோடு கலந்து ஆலோசனை நடத்தி இரண்டு வேண்டுகோள் விதித்தான். 

பீமன் சிவபக்தி உடையவன். பீமன் சிவபெருமானுக்கும், அவர் அணிந்து கொண்ட பொருளுக்கும் மரியாதை செலுத்துபவன். ஆகவே நீ ஒரு பெரிய கொன்றை மலர் மாலையைச் சிவபெருமானுக்கு அணிந்து கழற்றி வந்து பீமனின் தேருக்கு முன்னால் வைத்துவிடு. 

அந்த நேரத்தில் சிவபெருமான் அருளால் நீ பெற்றிருக்கும் கதாயுதத்தால் அபிமன்யுவை தலையில் அடித்து அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றான். ஜெயத்திரதனும் துரியோதனனின் வேண்டுகோளுக்கு ஒப்புக்கொண்டான். 

பின்பு சிவபெருமானின் மாலையை பீமன், அபிமன்யு இருவருடைய தேர்களுக்கும் நடுவே குறுக்காக போட்டு விட்டான். அபிமன்யு வியூகத்தின் உட்புறம் இருந்தவர்களை வென்று வீழ்த்தி விட்டு வியூகத்தில் இருந்து வெளியே வருவதற்காக திரும்பினான். அப்போது பீமனும், அபிமன்யுவும் அந்த மாலையைக் கண்டு திரும்பவும் அந்த வியூகத்திற்குள்ளே போரிட்டனர். 

அப்போது பீமன், வழிமேல் குறுக்கே கொன்றை மாலையைக் கொண்டு வந்து போட்டது யார்? என்று தனக்குள் சிந்தித்து, அது சூழ்ச்சி என்று புரிந்து கொண்டான். தன்னை அபிமன்யுவை நெருங்க விடாமலும், அபிமன்யுவை வியூகத்தை விட்டு வெளியே வராமலிருப்பதற்காகவும் செய்யப்பட்ட சூழ்ச்சி என்று தெரிந்து கொண்டான். 

பீமனும், அபிமன்யுவும் கொன்றை மாலையைத் தாண்டிச் செல்லாமல் வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்றதை கண்ட துரியோதனன் தன் சூழ்ச்சி பலித்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சியடைந்தான். வெளிப்புறம் திரும்பிய பீமனும் உட்புறம் திரும்பிய அபிமன்யுவும் தங்களுடைய கோபத்தை முழுவதையும் ஒன்று திரட்டி எதிரிகளைக் கடுமையாக தாக்குவதற்கு தொடங்கினர். 

அபிமன்யு எதிர்த்து வந்தபோது கர்ணன் எய்த அம்பு அபிமன்யுவின் வில்லை இரண்டாக முறித்துக் கீழே தள்ளியது. துரோணர், அபிமன்யு அம்பு ஒன்றை எடுத்து அபிமன்யுவின் வலது கையைத் துண்டித்து விட்டார். பிறகு சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற அரிய கதாயுதம் ஒன்று ஜெயத்திரதனிடம் இருந்தது. 

இடது கையால் கதாயுதம் பிடித்து அபிமன்யுவால் போரிட முடியாமல் கைசோர்ந்து கதாயுதத்தை கீழே போட்டுவிட்டான். அச்சமயம் ஜெயத்திரதன், தன் வலிமை வாய்ந்த கதாயுதத்தை அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடித்தான். அடுத்த விநாடி அபிமன்யு கீழே தரையில் சாய்ந்தான். 

அபிமன்யுவின் மரணம் பாண்டவர்களை பெரிதும் பாதித்தது. மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜெயத்திரதன் என்று அறிந்த அர்ஜூனன் ஜெயத்திரதனை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வேன், தவறினால், அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கிருஷ்ணர் மீது ஆணை! என்று சபதம் செய்தான். பதிமூன்றாம் நாள் போர் அத்துடன் நிறைவுப் பெற்றது. 

பதினான்காம் நாள் என்ன நடந்தது? அர்ஜூனனின் சபதம் நிறைவேறுமா? கௌரவர்களின் நிலை என்ன? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!