குருஷேத்திரப் போரின் முடிவு..! பாண்டவர்களின் வெற்றி..! பாகம் - 108

பதினெட்டாம் நாள் போர் முடிந்து பத்தொன்பதாம் நாள் காலை பொழுது புலர்ந்தபோது காட்டில் தங்கியிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் பாசறைக்குப் புறப்பட்டனர். பாசறை வாயிலை அடைந்தபோது திரௌபதி இறந்து கிடந்தவர்களை கட்டி அணைத்து அழுது கொண்டிருந்தாள்.

அதைக் கண்டதும் பாண்டவர்கள் திகைத்தனர். அருகில் சென்று பார்த்த போது இறந்து கிடப்பது தங்கள் ஐந்து பேருடைய புதல்வர்களின் உடல்கள் என்பது அவர்களுக்கு தெரிந்தது. உடனே பாண்டவர்கள் திரௌபதியோடு சேர்ந்து அவர்களும் அழுதனர்.

கிருஷ்ணர், பாண்டவர்களிடம் நேற்று நள்ளிரவில் அசுவத்தாமன் இங்கு வந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்கிறான்! இவர்கள் தூங்கும்போதே இவர்களைக் கொலை செய்திருக்கிறான் என்று கூறினார்.

அதனைக் கேட்ட பீமன் ஆவேசத்துடன் அசுவத்தாமன் தலையை அறுத்து அவனை பழிக்குப்பழி வாங்குகிறேன்! என்று கூறி வாளை உருவிக் கொண்டு ஆவேசமாக புறப்பட்டான்.

அர்ஜூனன் முதலியவர்களும் வாளை எடுத்துக்கொண்டு அசுவத்தாமனைத் தேடிச் செல்லத் தயாராகிவிட்டனர். ஆனால் அவர்களை, நீங்கள் அசுவத்தாமனை தேடிக் சென்று கொல்ல நினைப்பதால் எந்த பயனும் இல்லை.

அவன் இப்பொழுது வியாசருடைய ஆசிரமத்தில் அவன் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடித் தவம் செய்து கொண்டிருக்கிறான் என்று கூறி கிருஷ்ணர் பாண்டவர்களை தடுத்து நிறுத்தினார்.

பிறகு கிருஷ்ணர் பாண்டவர்களிடம், அசுவத்தாமனைப் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். துரியோதனன் இறந்துவிட்டான். மகத்தான இந்தப் பதினெட்டு நாள் யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அரசாளும் உரிமை உங்களுக்கு கிடைத்துவிட்டது.

 இறந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நடக்கவேண்டிய நல்ல காரியங்களைப் பற்றிக் கவனியுங்கள் என்று கிருஷ்ணர் அறிவுரை கூறினார். இந்த மாபெரும் யுத்தம் நடந்ததற்கு காரணம், உலகத்தில் மக்கள் பெருகிவிட்டார்கள். அது மட்டும் அல்லாமல் மக்களின் தீமைகளும் பெருகிவிட்டது.

பூமியின் சுமை அளவு அதிகமாக கனத்துவிட்டது. அந்தச் சுமை மேலும் பெருகிவிட்டால் பூமியில் மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டுவிடும். அதன் காரணமாகத்தான் இந்த மாபெரும் குருஷேத்திரப் போர் ஏற்பட்டது.

உனக்கும் துரியோதனனுக்கும் நடுவில் இருந்த பகை மட்டுமல்ல, உங்கள் இருவருக்கும் நடுவிலிருந்த பகையைக் கருவியாகக் கொண்டு ஒரு போரை உண்டாக்கி அந்தப் போரின் மூலம் பூமியின் பாரத்தைக் குறைக்க வேண்டுமென்ற என்னுடைய ஆசையை நான் நிறைவேற்றிக் கொண்டேன். 

இதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டு இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளைச் செய்துவிட்டு அஸ்தினாபுரத்திற்குப் புறப்படுங்கள்.

 அரசாட்சியைப் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை கவனியுங்கள் என்று கிருஷ்ணர் கூறினார். கிருஷ்ணர் கூறிய அறிவுரையை கேட்ட பின்பு, பாண்டவர்களுக்கு மனதில் தெளிவும் அமைதியும் உண்டானது.

இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கிரியைகளை அமைதியாகச் செய்து முடித்தனர். நடந்ததை நினைத்து அழுதுக் கொண்டிருந்த திரௌபதியிடம் கிருஷ்ணர், உன் சபதப்படி துரியோதனனின் குருதியைப் பூசி உன் கூந்தலை முடித்துவிட்டாய்! இனிமேல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். பின்பு எல்லோரும் அஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

திருதிராஷ்டிரன் சஞ்சயன் கூறிய ஆறுதல் உரைகளால் மனத்தேறியிருந்தானாயினும் தன் மகனைக்கொன்ற பீமனை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் இருந்தது. கிருஷ்ணரும், பாண்டவர்களும் அஸ்தினாபுரத்து அரண்மனை வாயிலை அடைந்தவுடன் தாங்கள் வந்திருக்கும் செய்தியை திருதிராஷ்டிரனுக்கு சொல்லி அனுப்பினர்.

திருதிராஷ்டிரன் அவர்களை மிகுந்த அன்போடும், பாசத்தோடும் வரவேற்பது போல நடித்தான். என் மகன்களை இழந்த துயரத்தால் நான் உங்களிடம் இராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு தவம் செய்வதற்காக காட்டிற்கு செல்ல இருக்கிறேன். உங்களை சந்தித்து வெகு நாட்கள் ஆகிறது.

உங்களை மார்புறத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது என்று வேண்டினார். பீமனைத் தழுவிக் கொள்ளும்போது அப்படியே அவனை நெறித்து கொன்று விடுவதற்குத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் திருதிராஷ்டிரனின் வஞ்சக சூழ்ச்சியை கிருஷ்ணர் உடனே புரிந்து கொண்டார். பீமனை இவரிடம் அனுப்பக் கூடாது என்று தனக்குள் எண்ணினார். தர்மர், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் இவர்கள் நால்வரும் மட்டும் ஒவ்வொருவராகத் திருதிராஷ்டிரனிடம் அருகில் சென்று அவரைத் கட்டித் தழுவிக் கொண்டு திரும்பி வந்தனர்.

பிறகு திருதிராஷ்டிரன் பீமன் எங்கே என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்து ஏறக்குறைய பீமனின் உயரம், பருமன் எல்லாப் பொருத்தமும் உடையதாக இருந்த இரும்புத் தகட்டினாலான சிலை ஒன்றைத் தூக்கிக் கொண்டு திருதிராஷ்டிரனுக்கு அருகில் நிறுத்தினார்.

பிறகு பீமன் வந்துவிட்டான் என்று கூறியதும் உடனே திருதிராஷ்டிரன் பீமன் என்று நினைத்து அந்தச் சிலையின்மேல் பாய்ந்து அதை தழுவிக் கொண்டு அழுத்தி நெறித்தார்.

இரும்புச் சிலை தூள் தூளாக உடைந்து விழுந்தது. கிருஷ்ணருடைய தந்திரமான செயலால் பீமன் பிழைத்தான், இரும்புச் சிலையை நிறுத்தி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று உணர்ந்தபோது திருதிராஷ்டிரன் சபையில் அனைவருக்கும் நடுவில் தலை குனிந்து நின்றார்.

 திருதிராஷ்டிரன் அவமானம் தாங்க முடியாமல் தட்டுத் தடுமாறி வழியைத் தடவிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினார். கிருஷ்ணர், தர்மத்தை ஒரு பக்கமும், அதர்மத்தை மற்றொரு பக்கமும் நிற்க வைத்து, குருஷேத்திரப் போரை அரங்கேற்றி, இறுதியில் தர்மத்தை நிலைநாட்டினார்.

பல ஆயிரம் வீரர்களை பலிக்கொண்டு, சடலங்களை மலையாக குவித்து, இரத்தத்தை ஆறாக பெருக்கெடுக்க செய்த குருஷேத்திர போர் முடிவிற்கு வந்தது. மாபெரும் இழப்புகளுடனும், கண்ணீர்களுடனும் குருஷேத்திர போர் முற்று பெற்றது.

கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினார்கள். பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

திருதிராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி அஸ்தினாபுரத்தை விட்டு காட்டிற்கு சென்றனர். தர்மர் மற்ற பாண்டவர்களின் துணையுடன் அசுவமேத யாகம் செய்து முடித்தார்.

அறத்தின் நாயகனான தர்மர் சிம்மாசனத்தின் மேல் அமர்ந்து ஆட்சி புரிந்தார். வீரம், அழகு, தூய்மை, வாய்மை ஆகிய நற்குணங்களை கொண்ட நான்கு சகோதரர்கள் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய நான்கு தம்பிமார்களும் தர்மர் அருகே பாதுகாத்து நிற்பது போல் அரியணையருகே வணக்கத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

பதினான்கு வருடங்களாக காட்டில் மறைந்திருந்த தர்மம் மீண்டும் அரியணை ஏறியது.

முற்றும்...!


Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!