பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையரின் எச்சரிக்கை...
பொன்னியின் செல்வன்.
பழுவேட்டரையரின் எச்சரிக்கை... வந்தியத்தேவனின் முடிவு.. என்னவாக இருக்கும்?.. அறியலாம் வாங்க!
வந்தியத்தேவன் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடுவதைக் கேட்டான். உடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.
உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே? அவன் எங்கே படுத்திருக்கிறான்? நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக்கூடாது.
அவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணி செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும். நம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக்கூடாது.
அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக்கூடாது ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்..."
இதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று எண்ணிப் பாருங்கள். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவேயில்லை. அவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதி செய்து கொண்டான்.
வடதிசை மாதண்ட நாயகர் யார்? சுந்தர சோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம்? அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? அச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.
மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை. தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல.
அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்கு பாதகம் ஒன்றும் நேராது. அதற்கு நான் பொறுப்பு! என்றான் கந்தமாறன்.
உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது. ஆகையினால் தான் எச்சரிக்கை செய்தேன்.
நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம். அஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வெளியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம். இது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்!" என்றார் பழுவேட்டரையர்.
அரசுரிமையைப் பற்றி பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான்.
வந்தியத்தேவன் என்ன முடிவு செய்திருப்பான்?.. என்பதை பற்றி அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்..
Comments
Post a Comment