இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!
நீங்கள் தூங்குவதற்கு முன்பு என்ன உணவுகள் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
மனிதன் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உணவு, தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தூக்கமும் அவசியம். தினமும் போதிய நேரம் உறங்கினால் மட்டுமே உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் நாள் முழுவதும் இயங்க முடியும். தூங்குவதற்கு முன்பு செல்போன், தொலைக்காட்சி போன்றவைகளை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். நிம்மதியாக உறங்குவதற்கு நீங்கள் இவற்றை எல்லாம் கடைபிடித்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவும் தூக்கத்துடன் தொடர்புடையது. இரவில் தூங்குவதற்கு முன்பு என்ன சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்பதை இங்கே காண்போம்.
சாப்பிட வேண்டியவை:
வாழைப்பழம்:
உங்கள் ஆற்றலை அதிகரிக்கும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். மேலும் இதில் அதிக அளவிலான மெக்னீசியம் நிறைந்துள்ளது. மேலும் தூக்கத்தை ஊக்குவிக்கும் செரோடோனின் மற்றும் மெலடோனின் சத்துக்களும் இதில் உள்ளன.
பாதாம்:
இதில் ஆரோக்கிய கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. தூங்குவதற்கு முன்பு இதனை சாப்பிடலாம். இதய செயல்பாடுக்களுக்கும் இது நல்ல பலனை தரும். இதுமட்டுமல்லாமல் தசை மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கும் பாதாம் முக்கியம்.
ஓட்ஸ்:
இதில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. மேலும் தூக்கத்தை ஊக்குவிக்கும் மெலடோனினும் காணப்படுகிறது. இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், இயற்கையாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கும் ஓட்ஸ் உதவும்.
தேன்:
இயற்கையாக கிடைக்கும் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. நீங்கள் நன்றாக உறங்குவதற்கு ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால் போதும்.
பால்:
இரவு தூங்குவதற்கு முன்பு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பால் குடிக்கலாம். இதனால் உங்களுக்கு நன்றாக தூக்கம் வரும். பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இன்னும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
சாப்பிடக் கூடாதவை:
ஆல்கஹால்:
ஆல்கஹால் உடலுக்கு பலவித பிரச்னைகளை தரக் கூடியது. குறிப்பாக இரவு நேரங்களில் தூக்கம் வராமல் இருப்பதற்கும் இதுமுக்கிய காரணமாக அமைகிறது. இரவு நேரங்களில் நன்றாக தூங்க வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக இதனை தவிர்த்து விடுங்கள்.
வெண்ணெய்:
வெண்ணெய் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு விட்டு படுத்தால் தூங்குவதில் சிரமம் ஏற்படுவதாக பலரும் கூறுகின்றனர். இது உங்கள் மூளை செயல்பாட்டுக்கு உதவும் என்றாலும், தூக்கம் காணாமல் போகும். அதனால் உங்கள் இரவு உணவில் இருந்து அதனை நீக்கி விடுங்கள்.
கார உணவுகள்:
பொதுவாகவே காரமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக தூங்குவதற்கு முன்பு கார உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்:
இரவு நேரங்களில் இதுமாதிரியான உணவுகளை சாப்பிட்டால், ஜீரணம் ஆக அதிக நேரம் ஆகும். மேலும் நெஞ்சு எரிச்சல் தொந்தரவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
காஃபி:
இரவு நேரத்தில் காஃபி குடிப்பதை முழுமையாக தவிர்த்து விடுங்கள். அதில் உள்ள காஃபின் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்காது. 10 மணி நேரம் கழித்து கூட இதன் விளைவுகளை நீங்கள் உணர முடியும்.
Comments
Post a Comment