பெரும்பாலான கரோனா நோயாளிகளுக்கு அறிகுறி இல்லாதது ஏன்?
கரோனா தொற்று பாதித்தவர்களுக்கான அறிகுறிகள் ஏராளம். சிலருக்கு மிக மோசமான அறிகுறிகள் தென்பட்டு, நிலைமை மோசமடைவதும் உண்டு, சிலருக்கு தொற்று இருக்கும் ஆனால் அறிகுறி இருக்காது என்ற அளவில் விட்டுவிடுவதும் உண்டு.
அவ்வளவு ஏன், இன்னும் சில கரோனா அறிகுறிகள் கண்டறியப்படாமலேயே கூட இருக்கலாம். அதாவது, கரோனா அறிகுறி இருப்பவரிடம் இருந்தே மற்றொருவருக்கு கரோனா தொற்று பரவினாலும் கூட மற்றொருவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பது ஏன் என்பதற்கு இதுவரை எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், அறிகுறி இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு இருக்கும் அபாயம், அறிகுறி இல்லாதவர்களுக்கு இருப்பதில்லை என்பது மட்டுமே இன்றளவில் நம்பப்படுகிறது.
அறிகுறி இருப்பவர்களை விடவும், கரோனா பாதித்தும் அறிகுறி இல்லாதவர்கள் மிக விரைவாக குணமடைகிறார்கள். ஆனால், அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளிடம் இருந்துதான் அதிகளவில் கரோனா தொற்றுப் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள அரிஸோனா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சார்ஸ் - கோவ்-2 என்று அடையாளம் காணப்படும் கரோனா வைரஸ், மனித உடலுக்குள் சென்று செல்களுக்குள் ஊடுருவி சில, பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
தற்போதைய புதிய ஆய்வில், உலகிலேயே கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேருக்கு ஏன் அறிகுறியே இல்லை அல்லது அவர்கள் மூலமாக அதிகளவில் கரோனா தொற்று பரவுகிறது என்பது குறித்து சில குறிப்புகள் கிடைத்துள்ளன.
கரோனா தொற்றால் வலி ஒடுக்கப்படுகிறதா?
டக்ஸன் மருத்துவக் கல்லூரியின், மருந்தியல் துறை பேராசிரியர் மருத்துவர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், சிலருக்கு கரோனா பாதித்தற்கான எந்த அறிகுறியும் தெரியாது, இதற்கு, உடலுக்குள் சென்ற கரோனா தொற்று அவர்களது உடலில் வலி ஒடுக்கத்தை ஏற்படுத்துவது காரணமாக இருக்கலாம். குறிப்பாக கரோனா தொற்றுக்குள்ளாகி ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள் தங்களது வழக்கமான பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர்கள் மூலமாக கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்படலாம்.
இந்த ஆய்வுக் கட்டுரை சர்வதேச மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.
"இது தொடர்பாக பல விஷயங்கள் ஆராயப்பட்டுள்ளது, கரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறியும் தென்படவில்லை, அவர் நலமாக இருக்கிறார், அதனால் எங்கும் செல்கிறார் எந்தத் தடையும் இல்லை. ஏன் என்றால், அவருக்கு கரோனா தொற்று காரணமாக வலி முடக்கம் ஏற்பட்டிருக்கும். ஒருவருக்கு வைரஸ் இருக்கிறது, ஆனால் உடல் நலம் பாதிக்கப்படவில்லை, ஏன் என்றால் அவரது வலி உணரும் செல்கள் கரோனா தொற்றால் முடக்கப்படுகிறது. எனவே, கரோனா தொற்றால் ஏற்படும் வலி முடக்கம்தான் அறிகுறி இல்லாமல் போவதற்கும், அறிகுறி இல்லாததால்தான் அவர்கள் மூலமாக கரோனா அதிகம் பரவவும் காரணம் என்பதை நிரூபித்துவிட்டால், அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், அமெரிக்காவின் நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்பு கூறியிருப்பது என்னவென்றால், கரோனா தொற்று பாதித்தவரிடம் இருந்து ஆரம்பக்கட்டத்தில்தான் அதிகளவில் தொற்றுப் பரவல் இருப்பதாகவும், அறிகுறி ஆரம்பிப்பதற்கு முன்பு வரை 40% அளவுக்கு கரோனா தொற்று வேகமாக மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் மூலம், ஒரே தொற்று இரண்டு நபர்களுக்கு தொற்றியிருக்கும் போது, இரு நபர்களுக்கும் இருவேறு அறிகுறிகள் தென்படுவது ஏன் என்பதை ஆராய்வதற்கு சிறு குறிப்பு கொடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.
சரி கரோனாவால் எப்படி உடலுக்கு வலி ஒடுக்கம் ஏற்படும்? இது தொடர்பான ஏராளமான ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அறிகுறி இல்லாமல் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் என்று தற்போது நம்பப்படுவது என்னவென்றால், கரோனாவைப் பரப்பும் சார்ஸ்-கோவ்-2 என்ற வைரஸ், மனித உடலுக்குள் தொற்றி, உடலில் இருக்கும் வலியை உணரும் செல்களைத் தாக்கி, அவற்றை மௌனமாக்கலாம். அந்த வைரஸில் புரதத் தன்மையை சமநிலைப்படுத்தும் போது ஒரு வேளை இதற்கு தீர்வு எட்டப்படலாம்.
உடலில் இருக்கும் வலி அறியும் செல்களுடன், கரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, அதனை முடக்கலாம். புதியதாக விஞ்ஞானிகள் மற்றொரு விடயத்தையும் கண்டறிந்துள்ளனர், அதாவது, நியூரோபிலின்-1 என்ற வலி உணரும் செல்களை பயன்படுத்தியும், கரோனா தொற்று உடலுக்குள் வேகமாக நுழையலாம் என்றும் சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால்தான் கரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை என்று முதற்கட்ட ஆய்வில் கூறப்படுகிறது.
Comments
Post a Comment