முட்டையை ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைக்கலாமா? கூடாதா?
முட்டையை தினமும் சாப்பிட்டால் புரதச்சத்து நிறைவாக கிடைக்கும் என்று சொல்வார்கள்.அதனால் முட்டையை அதிகமாக வாங்கி ஸ்டோர் செய்து கொள்பவர்கள் அதை எத்தனை நாள் வரை வைத்திருக்கலாம், பாதுகாப்பாக எப்படி வைப்பது? உணவு பொருளை கெடாமல் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜ்ஜுக்குள் இதை வைக்கலாமா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைக்கு ஒரு வயதாகும் போது முட்டையை உணவில் சேர்க்க தொடங்குகிறோம். அசைவ உணவை விரும்பி சாப்பிடும் பலருக்குமே இறைச்சி இல்லையென்றாலும் தினம் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும். இன்று வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள் கூட அவசர சமையலின் போது முட்டையை தான் பெரிதும் நம்ப வேண்டியிருக்கிறது. காய்களை நறுக்கி வேகவைத்து சமைத்து கொடுப்பதை காட்டிலும் ஐந்து நிமிடங்களில் சுவையான முட்டை ஆம்லெட் தயாராகிவிடுகிறது. முட்டையை கொண்டு முட்டை தோசை, முட்டை சப்பாத்தி, முட்டை சாதம், முட்டை தொக்கு, முட்டை குழம்பு, முட்டை கிரேவி, ஆம்லெட் என்று பலவிதமான டிஷ்கள் சுவைபட தயாரிக்கிறோம்.
முட்டையின் அவசியம் உணர்ந்துதான் என்னவோ பலரும் வாரம் தவறாமல் டஜன் கணக்கில் முட்டையை வாங்கி வீட்டில் இருப்பு வைத்துவிடுவார்கள். முன்பெல்லாம் முட்டைக்கென்று தனியாக மூங்கில் கூடை இருக்கும். அதை உத்தரணியில் தொங்கவிட்டு அதில் முட்டையை அடுக்கி வைப்பார்கள். பிறகு முட்டை வடிவத்தில் பிளாஸ்டிக் முட்டை பாக்ஸ் வந்தது. இதில் முட்டைகளை வாங்கி வைத்துவிட்டால் முட்டை உடையாமல் இருக்கும். பிறகு எப்போது அத்தியாவசிய பொருள்கள் போல் எல்லோரும் ஃப்ரிட்ஜ் வாங்கி பயன்படுத்த தொடங்கினோமோ அப்போதே வீட்டில் தேவையானது தேவையில்லாதது எல்லாமே ஃப்ரிட்ஜ்ஜுக்கு அடக்கமாகிவிட்டது. முட்டையையும் டஜன் கணக்கில் வாங்கி ஃப்ரிட்ஜ்ஜுக்குள் அடுக்க தொடங்கிவிட்டார்கள் இல்லதரசிகள். அப்படி ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைத்து சாப்பிடும் முட்டை உடலுக்கு நல்லதா அல்லது கெடுதல் செய்யகூடியதா என்பதை தெரிந்து அதற்கேற்ப சேமிப்பது தான் நல்லது.
உடலில் கடுமையான வயிற்றுப்போக்கை உண்டாக்கும் சால்மோனெல்லா என்னும் பக்டீரியா விலங்குகளின் குடலில் வாழ்கிறது. இவை விலங்குகளின் உடலில் இருக்கும் வரை பிரச்சனையில்லை. தவறி இந்த நுண்ணுயிரிகள் நாம் உண்ணும் உணவில் கலந்துவிட்டால் அது கடுமையான நோயை உண்டாக்கும். இந்த சால்மொனெல்லா நோய்த்தொற்றுகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்குவதோடு ஆபத்தானவையும் கூட.
இது கோழியின் முட்டைகளின் மேல் புறத்திலும் உட்பகுதியிலும் காணப்படுவதால் கவனமாக எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் முட்டையை குளிர்ச்சியான இடத்தில் வைத்து பிறகு அறைவெப்பநிலையில் பயன்படுத்தும் போது முட்டையின் மேல் அதிகம் வியர்த்து நீர் இருக்கும். இது முட்டையின் ஓட்டில் உள்ள சிறு துளைகள் வழியே செல்லும் போது பாக்டீரியா வேகமாக உள்ளே செல்ல வாய்ப்புண்டு. அதனால் அந்நாட்டை பொறுத்தவரை முட்டையை வாங்கினால் உடனே சமைக்க வேண்டும். அல்லது அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
நாம் வாங்கும் போது முட்டையின் மேல் தொல் நீங்காமல் அதிலேயே ஒட்டி இருந்தால் கண்டிப்பாக அதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது. மொத்தமாக முட்டைகளை வாங்கி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது ஒரு முட்டையின் வெளி ஓட்டில் சால்மோனெல்லா பாக்டீரியா இருந்தால் அது அப்படியே மற்ற முட்டைகளிலும் பரவ வாய்ப்புண்டு.
முட்டையை வாங்கி அப்படியே ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நாள்கணக்காக வைத்திருந்தாலும் அதன் ஓட்டில் பாக்டீரியா இருந்தால் அழியாது. அதே நேரம் முட்டையின் உள்ளே பாக்டீரியா இருந்தால் முட்டையை அறைவெப்பநிலையில் வைத்திருந்தாலும் உள்ளிருக்கும் பாக்டீரியா அழியாது.
இதற்கு தீர்வு முட்டையை வாங்கியவுடன் முட்டையின் வெளிப்புறத்தை வெந்நீரில் கழுவி அறைவெப்பநிலையில் வைத்து 3 முதல் 4 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல் தவிர்ப்பது நல்லது என்றாலும் தவிர்க்க முடியாமல் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தாலும் 7 நாட்களுக்குள் அதை பயன்படுத்திவிடவேண்டும். வாங்கி நாட்கணக்கில் வைத்து பயன்படுத்தும் முட்டை எதுவாக இருந்தாலும் அதை நன்றாக வேகவைத்து, பொரித்து சாப்பிட்டால் அந்த சூட்டில் முட்டையின் உள்ளே ஒருவேளை சால்மோனெல்லா இருந்தாலும் அவை நீங்கிவிடும்.
ஃப்ரிட்ஜ்ஜில் முட்டை என்றில்லாமல் எந்த பொருளையும் அதிக நாட்கள் வைத்து பயன்படுத்தகூடாது என்பது தான் மருத்துவர்களின் அறிவுரையும் கூட.
Comments
Post a Comment