பல்வேறு கருத்தடை வழிகள் - எதை எப்படி தேர்ந்தெடுப்பது....


கருத்தரிப்பது என்பது முற்றிலும் பெண்களின் கையிலேதான் உள்ளது. இந்தியாவில் நமக்கு நிறைய கருத்தடை வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது, எப்போது, எப்படி உபயோகிப்பது என்பது பல்வேறு காரணங்களை பொறுத்துள்ளது. சரியான கருத்தடை வழிமுறையை பின்பற்றினால் எதிர்பார்க்காத கர்ப்பம், திட்டமிடாத கர்ப்பம் போன்ற எதுவும் இருக்காது. பெண்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுத்து, எப்போது குழந்தை வேண்டும், எப்போது வேண்டாம், எவ்வளவு குழந்தைகள் வேண்டும், எவ்வளவு இடைவெளி என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும்.

நம் வயது, எவ்வளவு காலத்துக்கு கருத்தடை வேண்டும், தனிப்பட்ட வகையில் புகைபிடித்தல், உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, பக்கவாதம், மற்றும் குடும்ப ரீதியான இதய நோய், பக்கவாதம் முதலியவற்றை பொறுத்து தேர்வு செய்ய வேண்டும்.

காண்டம்

இதை மிக எளிதாக உபயோகிக்கலாம். பக்க விளைவுகள் இல்லாதது. பாலியல் சார்ந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும். மறக்காமல் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போதும் உபயோகிக்க வேண்டும். மற்ற வழிமுறைகளை காட்டிலும் அதிக தோல்வி விகிதம் உடையது, அதாவது கருத்தரிக்கலாம்.

ஹார்மோன் மாத்திரைகள்

இது பாதுகாப்பானது, நூறு சதவிகிதம் செயல்படும். மாதவிலக்கை முறையாக்கி, உதிர போக்கை கட்டுப்படுத்தி, வலியையும் குறைக்கும். தினமும் இரவு மறக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மறக்க நேர்ந்தால் எதிர்பாராத உதிர போக்கு நேரலாம் அல்லது கருத்தரிக்கலாம். மேலும், இது கருப்பை மற்றும் சினைப்பை கேன்சர் வராமல் தடுக்கும்.

உட்புற கருப்பை சாதனங்கள்

கர்ப்பத்தை தடுக்க சிறியதாக கருப்பையின் உள்ளே செலுத்தப்படும் சாதனங்கள் இவை. ஹார்மோன் மாத்திரைகள் போலவோ அல்லது காண்டம் போலவோ நினைவு வைத்து எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

இதில் இரண்டு வகை உண்டு.

காப்பர் டி- இதில் சிறிய காப்பர் வளையங்கள் இருக்கும். கிட்டத்தட்ட 100% கர்ப்பத்தை தடுக்கக்கூடியது. இது மிகவும் பாதுகாப்பானது, எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. மாடலை பொறுத்து 3, 5 அல்லது 10 வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இதை செலுத்தியவுடன் வரும் முதல் மாதவிலக்கில் உதிர போக்கு சிறிது அதிகமாக இருக்கும், வலியும் இருக்கும். பின்னர் இது சரியாகி விடும். கிட்டத்தட்ட காது குத்துவது போலதான் இதுவும். முதல் நாள் சிறிது வலி, வீக்கம் இருக்கும். பிறகு அது இருப்பதே மறந்துவிடும்.

மினரா- இதில் ஹார்மோன் உறை ஒன்று இருக்கும். இதுவும் நூறு சதவிகிதம் கர்ப்பத்தை தடுக்கும், பாதுகாப்பானதும் கூட. மாதவிலக்கின் உதிர போக்கை கட்டுப்படுத்தும். சில பெண்களுக்கு முற்றிலுமாக நின்றும் விடும். இதை 5 முதல் 7 வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

ஹார்மோன் ஊசி- இந்த ஊசியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போட்டுக்கொள்ள வேண்டும். மிக ஆற்றல் வாய்ந்தது. சிலருக்கு பிரியட்ஸ் நின்று விடும். சிலருக்கு அவ்வப்போது கொஞ்சம் வரலாம்.

குழந்தை பிறந்த பின் பெறக்கூடிய வழிமுறைகள்

பாலூட்டுவது- பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரியட்ஸ் வராது. கரு முட்டையை வெளிவராமல் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களே இதற்கு காரணம். குழந்தைக்கு தண்ணீர் கூட கொடுக்காமல், இரவில் குறைந்த பட்சம் மூன்று முறையாவது, முற்றிலும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பெண்களுக்கு கருவுறும் வாய்ப்பு இல்லை. இதை ஒரு வகையான கருதடுப்பு முறையாக பயன்படுத்தலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கென்று மாத்திரைகள் உள்ளது. அதையும் உட்கொள்ளலாம்.

நிரந்தர வழிமுறைகள்

விந்தணுக்களையும், கரு முட்டையையும் கொண்டு செல்லும் குழாய்களை அறுவை சிகிச்சை மூலம்  அடைப்பதே நிரந்தர முறையாகும். பெண்களுக்கு ட்யூபெக்டமியும் ஆண்களுக்கு வாசக்டமியும் செய்யப்படும். வாசக்டமி என்பது மிகச்சிறிய அறுவை சிகிச்சை. செய்து கொண்ட அன்றைய தினமே வேலைக்கு செல்லலாம். இது போன்ற இன்னும் சில வழிகளும் உள்ளன.

கருத்தடை வழிமுறையை தேர்ந்தெடுப்பது எப்படி?

நீங்கள் புகைப்பழக்கமும் இதய நோயும் இல்லாமல், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்பவரானால், ஹார்மோன் மாத்திரைகளே சிறந்த தேர்வு. டீன் ஏஜ் முதல் மெனோபாஸ் வரை உள்ள பெண்கள் உபயோகிக்கலாம்.
நினைவு வைத்து மாத்திரை உட்கொள்ள முடியாமல் போனால், காப்பர் டி அல்லது மினரா சிறந்த தேர்வாகும். டீன் ஏஜ் முதல் மெனோபாஸ் வரை உள்ள பெண்கள், சர்க்கரை வியாதி அல்லது இதய நோய் இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். சில மருத்துவர்கள், டீன் ஏஜ் பெண்களுக்கும், ஒரு முறை கூட குழந்தை பெறாத பெண்களுக்கும் இதை பரிந்துரைப்பதில்லை.
எப்போதாவது அல்லது வெவ்வேறு நபருடன் உடலுறவு வைத்துக்கொள்பவரானால், காண்டமே சிறந்தது.
சமீபத்தில் குழந்தை பெற்றவரானால் தொடர்ந்து பாலூட்டலாம். மாத்திரைகள் அல்லது காப்பர் டி உபயோகிக்கலாம்.
நீங்கள் வேண்டிய அளவு குழந்தை(கள்) பெற்றுக்கொண்டால், நிரந்தர தீர்வு- ட்யூபெக்டமி அல்லது வாசக்டமி நோக்கி செல்லலாம்.
எந்த விதமான கருத்தடை வழிமுறையை பின்பற்றினாலும், பின் வரும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

காரணமில்லாத, எதிர்பாராத உதிர போக்கு.
பிரியட்ஸ்க்கு நடுவில் அல்லது உடலுறவுக்கு பின்னர் உதிர போக்கு
கெண்டைத்தசையில் வலி
காரணமில்லாத வயிற்று வலி
காப்பர் டி உபயோகிக்கும் பெண்களுக்கு, நூல் தொட்டுணர முடியாமல் இருப்பது.
மாத்திரை எடுத்துக்கொள்ளும் பெண்கள், மாத்திரை எடுக்க மறந்தாலோ அல்லது பிரியட்ஸ் வந்தாலோ.
முடிவாக நான் முன்னமே கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். கருத்தரிப்பது என்பது முற்றிலும் பெண்களின் கையிலேதான் உள்ளது. சரியான கருத்தடை வழிமுறையை பின்பற்றினால் எதிர்பார்க்காத கர்ப்பம், திட்டமிடாத கர்ப்பம் போன்ற எதுவும் இருக்காது.


Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!