அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில்!
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்னும் ஊரில் அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலம் இது.
மேற்கு நோக்கிய கோயில்களில் வேண்டுதல் வைத்தால் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கிய தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே அமைந்துள்ளன.
இத்தலத்தில் ராமலிங்கசுவாமி மூலவராக காட்சியளிக்கிறார். இக்கோயிலில் தரிசனம் செய்தால், 108 சிவன் கோயில்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
இத்தலத்திற்கு கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது.
அனுமந்த லிங்க சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் மூலஸ்தான லிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாங்களே பூ தூவி வழிபடலாம்.
ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பமாக உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் வணங்கியபடி நிற்கும் சிலைகள் உள்ளது.
பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் காட்சியளிக்கிறார். மேலும், காசி விசாலாட்சி, அன்னபூரணி ஒரு சன்னதியிலும், காலபைரவர், சனீஸ்வரர், சூரிய பகவான் ஆகியோர் மற்றொரு சன்னதியிலும் காட்சி தருகிறார்கள். எதிர்மறை கிரகங்களான சூரிய பகவானும், சனீஸ்வரரும் அருகருகில் இருப்பதால் சனிதோஷம் உள்ளவர்கள் இந்த சன்னதியில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பொதுவாக சிவன் கோயில்களில் மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான் தரிசிக்க முடியும். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்களை தரிசிப்பது மிகவும் சிறப்பு.
ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடலாம்.
சிவன் சன்னதி எதிரே நந்தி மட்டுமே இருக்கும். ஆனால் இங்கு நந்தியுடன் காமதேனு பசுவும் இருக்கிறது.
காமதேனு சிலை, கழுத்தில் சலங்கைகள் அணிந்து, சிவனை நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடைபெறுகிறது.
சிவராத்திரியன்று 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
நவராத்திரி திருவிழா, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
சனி தோஷம் விலக, பித்ருதோஷம் நீங்க, அறியாமல் செய்த பாவம் விலக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு தேன், பால் கொண்டு அபிஷேக ஆராதனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
Comments
Post a Comment