உடலுறவால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆண்கள், பெண்கள் உடல்நலம் பெற பாலுறவு எப்படி உதவுகிறது?
உடலுறவால் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் தாக்கம் என்ன, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்யேகமாகக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தூக்கம், நோய்கள், வயதாவது உள்ளிட்டவற்றுடன் உடலுறவுக்கு இருக்கும் தொடர்பு என்ன என்பது பற்றி பார்ப்போம்.
மன அழுத்தம் குறைகிறது:
தற்காலத்தில் பரவலாக இருக்கும் மன அழுத்தத்தை உடலுறவு குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதிகமாக உடலுறவு கொள்ளும் தம்பதிகள் மத்தியில் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக அலுவலகத்தில் ஏதேனும் உரை நிகழ்த்த வேண்டிய நாளில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த நாள் காலையில் உடலுறவு கொண்டவர்களுக்கு பதற்றம் குறைந்து, நல்ல முறையில் அவர்களால் உரை நிகழ்த்த முடிந்தது என்பதை அமெரிக்க உளவியல் சங்கம் ஓர் ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கிறது. நாள்தோறும் தாம்பத்ய உறவுகொள்ளும் தம்பதிகளிடையே மனக்கசப்பு, சண்டைகள் குறைந்திருக்கின்றன. நெருக்கம் அதிகரித்திருக்கிறது.
வாழ்நாளை அதிகரிக்கிறது:
நிறைவான உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு வாழ்நாள் அதிகரிக்கிறது. சுமார் 8 ஆண்டுகள் வரை ஆயுள்காலம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முதலாவது காரணம் இதயம். உடலுறவால் இதயப் பிரச்னைகள் குறைவாகின்றன. சிறப்பான தாம்பத்ய உறவு இருக்கும் தம்பதிகளுக்கு ரத்த அழுத்தம் சீராகிறது. சில ஹார்மோன்கள் சுரக்கும்போது இதயத்துடிப்பு அதிகமாவதால், இதயத்தின் செயல்பாடு சிறப்பாகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதுவே வாழ்நாள் அதிகரிக்க முதலாவது காரணம்.
இளமை நீடிக்கிறது:
உடலுறவின்போது சுரக்கும் ஹார்மோன்களால் ரத்த ஓட்டம் அதிகரித்து செல்களைப் புத்துணர்வடையச் செய்கிறது. இதனால் உடலில் வயதான மாற்றங்கள் ஏற்படுவது தள்ளிப்போகின்றன. இளமை நீடித்திருக்கிறது.
உடலுறவை ஓர் உடற்பயிற்சியாகவும் பார்க்கலாம். சுமார் 20 நிமிடம் வரை உறவுகொள்ளும்போது சுமார் 300 கலோரி வரை நமது சக்தி எரிக்கப்படுகிறது. இதுவும் உடலுக்கு நன்மையைத் தருகிறது.
தூக்கமின்மைக்குத் தீர்வு:
மாதவிலக்கு நிற்கும் நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளால் தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் தூக்கமின்மை பிரச்னைக்காக சிகிச்சைக்காக வரும்போது, அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே அவர்களுடைய பாலியல் உறவு எப்படி இருக்கிறது என்பதைப்பற்றித்தான். பாலுறவில் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதல் பிரச்னை தூக்கமின்மை.
உடலுறவில் ஈடுபடும்போது சுரக்கும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் மனதை தளர்வாக்கி நல்ல தூக்கத்தைத் தருகிறது. இந்த வகையில், இயற்கையாக வரும் தூக்கத்தைக் காட்டிலும், உடலுறவுக்குப் பிறகு வரும் தூக்கமானது கூடுதல் உடல் ஆரோக்கியத்துக்கு காரணமாகிறது. அதனால் உடலுறவுப் பிரச்னையை சரிசெய்யும்போது தூக்கமின்மை தானாகவே சரியாகிவிடுகிறது. வாழ்க்கைத் தரமும் அதிகரிக்கிறது.
சிறுநீர்ப் பை பாதிப்பைத் தடுக்கிறது:
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பரவலாக வரும் பாதிப்பு நீர்ப்பை இறக்கம் மற்றும் சிறுநீரை அடக்க முடியாமல் போவது. உடலுறவு கொள்ளும்போது சுரக்கும் கூடுதலான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படும் உயவுத் தன்மை போன்றவை சிறுநீர்ப்பையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கின்றன. அதனால் போதுமான உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் ஏற்படும் பாதிப்பு குறைகிறது.
விதைப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது:
ஆண்களுக்கு பிரத்யேகமாக எடுத்துக் கொண்டால், விதைப்பை புற்றுநோய் வருவது 30 சதவிகிதம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது:
உடலுறவு மூலம் வாழ்நாள் 8 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என்று பார்த்தோம். இதற்கு முக்கியமான ஒரு காரணம் நோய் எதிர்ப்புசக்தி. உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலுறவு கொள்வோருக்கு ஐஜிஏ இம்யூனோகுளோபுலின் என்ற நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகமாகின்றன. இவைதான் நோய் எதிப்பில் முதல் வரிசையில் இருப்பவை. காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை இவை தடுக்கின்றன. அதனால் நோயில் இருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது.
உடலுறவின்போது DHA என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது வயதான மாற்றங்களைத் தடுத்து இளமையாக இருக்க உதவுகிறது.
எலும்பை வலுவாக்குகிறது:
வயதான பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. இதனால் எலும்பில் கால்சியம் உள்ளிட்ட கனிமங்களில் குறைபாடு ஏற்படுகிறது. எலும்பு பலவீனமடைகிறது. உடலுறவு கொள்ளும்போது ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால், இந்தக் குறைபாடு தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவாகின்றன.
வலி நிவாரணியாகச் செயல்படுகிறது:
அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்னை உடல் வலி. சிகிச்சைக்காக வரும் பல பெண்கள் கூறும் பரவலான பிரச்னை இது. இவர்களுக்கு பெரும்பாலும் உடலுறவில் சிக்கல் இருப்பது தெரியவருகிறது. உடலுறவின்போது Neurotransmitter எனப்படும் நரம்பியக்கடத்திகள் வெளியாவதால் தசைகள் தளர்வாகி உடல் வலிகள் குறைகின்றன. அந்த வகையில் உடலுறவு ஒரு வலிநிவாரணியாகவும் இருக்கிறது.
Comments
Post a Comment