அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில்...!!

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில்!

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் என்னும் ஊரில் அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

இந்த கோயிலின் சிறப்புகள்?

ஆஞ்சநேயர் கோயில், எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தின் மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வாலறுந்த ஆஞ்சநேயர் என இரண்டு மூர்த்திகள் அருகருகே காட்சி தருகின்றனர். இங்கு ஒரே தலத்தில் இரண்டு ஆஞ்சநேயர்களை வழிபடலாம்.

சிவலிங்கத்தை உடைக்க முயன்று வால் அறுந்ததால் இங்குள்ள ஆஞ்சநேயர் வால் அறுந்த கோலத்திலேயே காட்சியளிக்கிறார். 

அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே ஒரு கோடி "ராமரக்ஷா" மூல மந்திர எழுத்துகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.

இத்தல ஆஞ்சநேயர் பக்தர்களின் பயத்தை போக்கி காத்தருள்வார் என்பதால், "அபய ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படுகிறது.

கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு மூர்த்தியாக, ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் பார்க்கமுடியாத அதிசயம்.

இத்தலத்தில் ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தம், கோயிலுக்கு பின்புறம் உள்ளது. 

கோயில் வளாகத்தில் அத்தி மரம் தலவிருட்சமாக உள்ளது. இம்மரத்தில் இளநீரை கட்டி, ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் வழக்கம் உள்ளது. 

திருவிழாக்கள்?

ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஆனி ரேவதி நட்சத்திரம், புரட்டாசி கடைசி சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர்.

வெள்ளிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அன்று தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

குழந்தை பாக்கியம் கிடைக்க, ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்ள, பயம் மற்றும் மனக்குழப்பம் நீங்க பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல் நிறைவேறியவுடன் ஆஞ்சநேயருக்கு வடை, வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

இளநீர் கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
 

Comments

Popular posts from this blog

காதலுக்காக காத்திருப்பது சுகமே!

பருப்பு ரசம்

ரவா கேசரி