சுய இன்பம் செய்யாமலே இருந்தால் என்ன ஆகும்?

கட்டுக்கதைகளும் அறிவியல் உண்மைகளும்!

சுய இன்பம் உடல் நலத்திற்கு எதிரானது என்ற எண்ணம் காலம் காலமாகவே மக்கள் மனதில் ஆழமாக விதைக்கப்படுகிறது. சுய இன்பம் என்பது மனிதர்களிடையே இயல்பானது என்றும் மன அழுத்தத்தைக் குறைக்க அது உதவுகிறது என்றும் நவீன அறிவியல் கூறினாலும், சுய இன்பப் பழக்கம் காரணமாகவே மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்களும் கணிசமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பல்வேறு மதங்களும் கலாசாரங்களும் சுய இன்பப் பழக்கம் தகாத செயல் என்றே கற்பித்து வந்துள்ளன, வருகின்றன. இதன் காரணமாக சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடும் ஒருவர் தான் செய்வது ஒழுக்கமற்ற செயல் என்னும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறார். இந்தக் குற்ற உணர்ச்சி கடும் மன அழுத்தத்தை அவருக்கு ஏற்படுத்துகிறது.

மற்றொரு புறம், சுய இன்பப் பழக்கம் உடல்ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதும் பலரின் கவலையாக உள்ளது. நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தனது உடல்நலம் சார்ந்த பல்வேறு நிலைகளுக்கும் சுய இன்பமே காரணம் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
தலை முடி உதிர்வது, கண் பார்வை மங்குவது, அதிகமாக மூச்சு வாங்குவது என்று தனது உடல் நல பாதிப்புகள் அனைத்திற்கும் சுய இன்பப் பழக்கம்தான் காரணம் என்று அவர் எண்ணுகிறார். அவருக்கு மது அருந்துதல், புகையிலை போன்ற பழக்கங்களும் உண்டு.

உடல்நலம், மன நலம் ஆகியவற்றில் சுய இன்பப் பழக்கத்தால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகப் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வரும் சூழலில் இது தொடர்பான உண்மை என்ன?
உண்மையாகவே சுய இன்பம் என்பது உடலுக்குத் தீங்கானதா? ஒருவர் தன் வாழ்க்கை முழுக்க சுய இன்பம் செய்யாமலே இருப்பதால் உடலுக்கு நல்லதா கெட்டதா?


சுய இன்பப் பழக்கம் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்குமா? 

நிச்சயமாக இல்லை என்கிறார் குழந்தை பிறப்பு மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்த ஆலோசகர் ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரன். "மன அழுத்தத்தைக் குறைக்கிறது, தூக்கம் வர உதவுகிறது என்பது சுய இன்பத்தின் நன்மைகளாகக் கூறப்படுவதுண்டு.
பெண்கள் மாதவிடாய் நாட்களின்போது சுய இன்பம் மூலமோ, உடலுறவு மூலமோ இன்பம் பெறுவது என்பது அவர்களின் வலியை சற்றுக் குறைக்கும். எனினும், உதிரப் போக்கு இருக்கும் என்பதால் காண்டம் அணிந்து உடலுறவு கொள்வது, பெண்ணுறுப்பிற்குப் பதிலாக கிளிட்டோரிஸ் மூலம் சுய இன்பம் பெறுவது ஆகியவை பாதுகாப்பானதாக இருக்கும்," என்றார்.

இதையெல்லாம்விட முக்கியமான விஷயம், நம் உடல் மீதான நம்பிக்கையை சுய இன்பம் அதிகரிக்கும் என்கிறார் ஜெயஸ்ரீ.
"நம் சமுதாயத்தில் பிறப்பு உறுப்புகளைத் தொடக்கூடாது என்று சொல்லப்பட்டே நாம் வளர்க்கப்படுகிறோம். இத்தகைய சூழலில் வளர்பவர்கள் திருமணத்திற்குப் பின்னர் உடலுறவுகொள்ளும்போது பிரச்னை ஏற்படுகிறது.
என்னிடம் சிகிச்சைக்கு வரும் பலர், என் கணவர் அல்லது மனைவி அங்கே தொடும்போது மிகவும் கூச்சமாக உள்ளது என்று கூறுகின்றனர். பலர் தங்களின் பிறப்புறுப்புகளைத் தாங்களே தொட்டிருக்க மாட்டார்கள்.

அத்தகைய சூழலில் சுய இன்பம் என்பது நமது உடல் தொடர்பான நம்பிக்கையை அதிகரிக்கும். நிர்வாணம் தொடர்பான நமது கூச்சத்தை அது போக்குகிறது. இந்த உடல் பாகம் இப்படித்தான் இருக்கும் என்ற தெளிவை ஏற்படுத்துகிறது," என்றார்.

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா?

இதேபோல், அதிகமாக முடி கொட்டுவது, கண் பார்வை மங்குதல் , உடல் சோர்வு போன்றவற்றுக்கும் சுய இன்பப் பழக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார்.
"நாம் நீண்ட தூரம் நடந்தால் எப்படி சோர்வாக உணர்கிறோமோ அதேபோல், தொடர்ச்சியாக சுய இன்பத்தில் ஈடுபட்டால் உடல் சோர்வாக இருக்கும். அதீத ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சுய இன்பப் பழக்கம் மூலம் வலி ஏற்படலாம். எனவே, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்," என ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

ஆண்கள் சுய இன்பம் செய்தால் விந்தணுக்கள் குறைந்து ஆண்மை குறைவு ஏற்படும் என்று கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விந்து வெளியேறுவது விந்தணுவின் தரத்தை மேம்படுத்தும். விந்து நீண்ட நாட்களாக உடலிலேயே தங்கியிருந்தால் டி.என்.ஏ. பாதிப்புக்கு உள்ளாகும் சூழலில் அது இருக்கும். எனவே, சுய இன்பப் பழக்கம் உடலுக்கு நன்மையைச் செய்யுமே தவிர தீமை எதையும் செய்யாது என்று தெளிவுப்படுத்தினார்.

சுய இன்பம் செய்யாமலே இருப்பதும் ஒரு வகையில் பெரிய விளைவுகளைக் கொண்டு வரும் என்றும் ஒருபுறம் நம்பப்படுகிறது. அதுகுறித்துக் கேட்டபோது அவர், "இத்தகைய முயற்சியால் 'எவ்வித தீமையும் இல்லை'. எனினும், சுய இன்பப் பழக்கத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்காக குறிப்பிட்ட காலம் வரை சுய இன்பம் செய்யாமல் இருக்கும் முயற்சியில் ஈடுபடுவது அவர்களின் மனநலம் சார்ந்தது," என்றார்.

ஒரு நபர் தன் வாழ்நாளில் சுய இன்பமே செய்யாமல் இருந்தால் உடலுக்கு அதிக பலம் கிடைக்கும் என்றும் பேசப்படுகிறதே, உண்மையில் இது சாத்தியமா, அவ்வாறு ஒருவர் இருக்கும் பட்சத்தில் அது அவருக்கு ஆரோக்கியமானதா அல்லது ஆபத்தானதா?
அது சாத்தியமே இல்லை எனத் தெரிவித்த அவர், ''ஒரு நபர் சுய இன்பம் செய்யாமல் இருந்தாலும் அவர் தூக்கத்தில் இருக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் சூழலிலோ நிச்சயமாக விந்து வெளியேறிவிடும்,'' என்றார்.

உடலுறவு மீதான நாட்டம் குறையுமா?

சுய இன்பத்தில் ஈடுபடுபவர்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்காது என்று சொல்லப்படுவதும் கட்டுக்கதைதான் என்கிறார் ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரன்.
சுய இன்பம் என்பது ஒருவிதமான இன்பத்தை தருகிறது, உடலுறவு என்பது ஒருவிதமான இன்பத்தை தருகிறது. இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள்தான் சுய இன்பத்தில் மட்டுமே இன்பம் இருக்கிறது என்றும் உடலுறவில் நாட்டம் குறையும் என்றும் கூறுகின்றனர் என்றார்
சுய இன்பப் பழக்கத்தால் உடல்ரீதியாக பெரிய பாதிப்பு இல்லாத நிலையில், மனதளவில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரனின் கருத்தை மனநல மருத்துவர் டி.வி. அசோகனும் ஏற்றுக்கொள்கிறார்.

"பதின்ம வயதை எட்டும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது, பாலியல் தொடர்பாகத் தாங்கள் கேட்டவை, அறிந்தவை குறித்துப் பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

பதின்ம வயதை எட்டிய ஆண்கள், பெண்களுக்கு சுய இன்பத்தில் ஈடுபடும் எண்ணம் ஏற்படுவது இயல்பானது. அந்தக் காலகட்டத்தில் இதையெல்லாம் வெளிப்படையாகப் பேச முடியாத சூழல் இருந்தது. தற்போதைய தலைமுறையில் இது தொடர்பாக ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது," என்றார்.

சுய இன்பம் மன அழுத்தத்தை ஏற்படுத்துமா?

சுய இன்பம் தவறானது என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பழக்கத்தில் ஈடுபடுவது ஒரு சிலருக்கு மன அழுத்தத்தைத் தரலாம். அதேநேரத்தில் தற்போதும் சுய இன்பம் தொடர்பாகப் பல தவறான தகவல்கள் உலவுகின்றன என்று அவர் கூறுகிறார்.
"சுய இன்பம் செய்தால் சிறிது சோர்வு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், ஆண்மையை இழந்துவிடுவோம் என்பதெல்லாம் கட்டுக்கதைதான். சுய இன்பம் தொடர்பாகப் பல கட்டுக்கதைகள் உலா வருவதற்கு முக்கிய காரணம் நவீன மருத்துவம் பயின்றவர்கள் இது தொடர்பாகப் பெரியளவில் வெளிப்படையாக பேசாததுதான். இதனால், யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்ற நிலை ஏற்பட்டது," என்றும் அவர் தெரிவித்தார்.

பாலியல் கல்வி அவசியம் என்றும் மருத்துவர் டி.வி. அசோகன் வலியுறுத்துகிறார். "சுய இன்பம் குறித்துப் பேசும்போது அது தொடர்பான பாலியல் விஷயங்கள் அனைத்தையும் வெளிப்படையாக வைக்க வேண்டும்.
பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கொண்டு வருவது அவசியம். தற்போது இணையத்தில் அனைத்துமே கொட்டிக் கிடக்கிறது. இதில் சரியானது எது, தவறானது எது என்பதைத் தேர்வு செய்வதில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே தெளிவான நிலை இல்லை.
எனவே, இது தொடர்பான கல்வி அவசியம். ஒருவேளை சரியான வழிகாட்டுதல் இல்லையென்றால், இணையத்தில் தவறாகக் கற்பிக்கப் பலர் இருக்கின்றனர்," என்றார்.

உடல் கிளர்ச்சிக்காக சுய இன்பம் செய்வதில் தவறு இல்லை. ஆனால், கட்டாய சுய இன்பப் பழக்கம் என்பது தவறானது என்றும் மருத்துவர் டி.வி. அசோகன் கூறுகிறார்.

"வேதனை, மகிழ்ச்சி, வெறுப்பு என எந்த மனநிலையில் இருந்தாலும் சுய இன்பத்தில் ஈடுபடுவது, தூக்கம் வரவேண்டும் என்பதற்காக சுய இன்பதில் ஈடுபடுவது போன்றவை பிரச்னை ஆகிறது. இது பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற நிலைக்குத் தள்ளுகிறது. அளவுக்கு அதிகமான எதுவுமே ஆபத்துதான்," என அவர் எச்சரிக்கிறார்.
ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரனும் இதே கருத்தைக் கூறுகிறார். 

"உங்களின் தினசரி நடவடிக்கையைப் பாதிக்காத வரையில் சுய இன்பப் பழக்கத்தால் பாதிப்பு இல்லை. மன அழுத்தம், கவலை போன்றவற்றை சரி செய்வதற்கு முயற்சி எடுக்காமல் அவற்றில் இருந்து தற்காலிகமாக நிவாரணம் பெற சுய இன்பம் செய்வது தவறானது," என்கிறார் அவர்.



Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!